திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன. அப்பள்ளியின் சமூக அறிவியல் மன்றம் சார்பாக தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகளைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐரன்பிரபா வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இதுகுறித்து அப்பள்ளியின் சமூக அறிவியல் மன்றப் பொறுப்பாளர் ஆசிரியர் சூரியகுமார் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தும் பணி தொடங்கி இருக்கிறது. இந்த சமயத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாணவர்கள் கரோனா நோயிலிருந்து தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டும் இந்த சுவரொட்டிகளைத் தயாரித்திருக்கிறோம்.
தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளும் பயன்பெறும் வண்ணம் இந்த சுவரொட்டிகள் கட்செவி மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் பகிரப்படும் என்றார். மாணவர்களின் இந்த முயற்சியை அப்பள்ளியின் ஆசிரியர்கள் விஜயகுமாரி, ராமமூர்த்தி, இளையராஜா, ரேணுகா ஆகியோர் பாராட்டினர்.
வலங்கைமான் அருகேயுள்ள தென்குவளவேலி அரசுப் பள்ளியில் வெளியிடப்பட்ட கரோனா விழிப்புணர்வு சுவரொட்டிகள்.
0 Comments