கல்வித் தொலைக்காட்சி உள்ளிட்ட அரசு மேற்கொண்ட செயல்பாடுகளின் மூலம் படித்த மாணவர்களின் கற்றல் திறனை அறிய, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை மதிப்பீடு செய்யப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக 10 மாதங்களாகப் பள்ளிகள் இயங்கவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வித் தொலைக்காட்சி வழியாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், பாடங்கள் நடத்தப்பட்டன. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கற்றல் திறனை அறியப் பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாகப் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த 19-ம் தேதி முதல் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் கற்றல் அடைவு பாதிக்காத வகையில் பள்ளிக் கல்வித்துறை முன் முயற்சிகளை மேற்கொண்டது.
அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினிகளில் காணொலிகள் பதிவேற்றம், கல்வித் தொலைக்காட்சி மற்றும் சில தனியார் தொலைக்காட்சிகளில் பாடம் சார்ந்த காணொலிகளை ஒளிபரப்பு செய்தல், க்யூஆர் குறியீட்டுடன் கூடிய பாடப்புத்தகங்களை உரிய நேரத்தில் வழங்குதல் போன்ற செயல்பாடுகளின் மூலம் மாணவர்களின் கற்றல் அடைவுக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் இதுவரை எந்த அளவுக்கு அடைவுத்திறன் பெற்றுள்ளார்கள் என்பதை அறிந்துகொண்டு, அதன் அடிப்படையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு எந்தெந்தப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியர்கள் திட்டமிடுவது அவசியமாகும். இதற்காக ஆரம்பக் கற்றல் நிலை மதிப்பீடு மேற்கொள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த மதிப்பீடானது எமிஸ் தளம் மூலமாக பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வக வசதியைப் பயன்படுத்தி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் ஆகியவை மூலமாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடத்தப்படவுள்ளது. மதிப்பீடு செய்வது சார்ந்து, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் இதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள் இது சார்ந்து தனிக்கவனத்துடன் செயல்படக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments